உள்ளூர் செய்திகள்

குமரியில் காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டம்- விஜய் வசந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கைது

Published On 2023-04-15 13:13 IST   |   Update On 2023-04-15 13:13:00 IST
  • நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் மாநகர காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவர் நவீன் குமார் தலைமையில் போராட்டம் நடந்தது.
  • போராட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், இரணியல், குழித்துறை ரெயில் நிலையங்களில் இன்று மறியல் போராட்டம் நடந்தது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் மாநகர காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவர் நவீன் குமார் தலைமையில் போராட்டம் நடந்தது. விஜய் வசந்த் எம்.பி. உள்பட நிர்வாகிகள் பலரும் போராட்டத்தில் பங்கு பெற்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ரெயில் நிலையத்திற்குள் நுழைய முடியாதபடி அந்த சாலையில் பேரி கார்டு வைத்து தடுக்கப்பட்டிருந்தது. அதனை மீறி காங்கிரசார் ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

மார்த்தாண்டத்தில் உள்ள குழித்துறை ரெயில்வே நிலையத்தில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங் தலைமையில் காங்கிரசார் மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் இரணியல் ரெயில் நிலையத்தில் மாவட்ட தலைவர் கே.டி. உதயம் தலைமையில் போராட்டத்திற்கு கட்சியினர் திரண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து பேரணியாக ரெயில் நிலையம் செல்ல முயன்ற பிரின்ஸ் எம்.எல்.ஏ. உள்பட கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

Tags:    

Similar News