உள்ளூர் செய்திகள்

சென்னை மாநகராட்சி பணிகளில் தி.மு.க.வினர் குறுக்கீடு- காங்கிரஸ் கவுன்சிலர்கள் தவிப்பு

Published On 2023-05-30 06:34 GMT   |   Update On 2023-05-30 06:34 GMT
  • சென்னை மாநகராட்சியில் தி.மு.க.வை சேர்ந்த பிரியா மேயராக இருக்கிறார்.
  • கவுன்சிலர்கள் அமிர்த வர்ஷினி, சுகன்யா உள்பட சிலர் தங்கள் வார்டுகளில் பணிகள் நடைபெற தி.மு.க.வினர் தடையாக இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை:

தி.மு.க. எங்கள் கூட்டணி கட்சிதான். ஆனால் எங்கள் வார்டுகளிலும் அவர்கள் தலையிட்டு வருகிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியினர் போர்க்கொடி தூக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை மாநகராட்சியில் தி.மு.க.வை சேர்ந்த பிரியா மேயராக இருக்கிறார். மொத்தம் உள்ள 200 கவுன்சிலர்களில் 13 பேர் காங்கிரசை சேர்ந்தவர்கள்.

இவர்களில் 10 கவுன்சிலர்கள் மாநகராட்சி காங்கிரஸ் கட்சி தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் கமிஷனர் டாக்டர் ராதா கிருஷ்ணனை சந்தித்து தங்கள் வார்டு பிரச்சினைகள் பற்றி முறையிட்டார்கள்.

கவுன்சிலர்கள் அமிர்த வர்ஷினி, சுகன்யா உள்பட சிலர் தங்கள் வார்டுகளில் பணிகள் நடைபெற தி.மு.க.வினர் தடையாக இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை அழைத்து சென்று கமிஷனரிடம் முறையிட்டார்கள்.

காங்கிரஸ் வார்டுகளில் தி.மு.க.வினருக்கு தெரியாமல் பணிகள் நடைபெறக்கூடாது என்றும், அவர்கள் சொல்லும் பணிகளைத்தான் செய்ய வேண்டும் என்று நிர்பந்திப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பணிகளை தேர்வு செய்வது, நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சில வார்டுகளில் வாக்குவாதமே ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நாங்கள் தான் உங்களை ஜெயிக்க வைத்தோம் என்று தி.மு.க.வினர் சொல்ல, அது கூட்டணி கட்சிகளின் கடமை என்று காங்கிரசார் சொல்ல வாக்குவாதம் முற்றியிருக்கிறது.

பணிகள் தொடர்பாக வார்டு என்ஜினீயர்களை காங்கிரஸ் கவுன்சிலர்கள் சந்தித்தால் செய்து கொடுப்பதில்லையாம். தி.மு.க. நிர்வாகி வேறு பணியை சொல்லியிருக்கிறார் என்று சொல்கிறார்களாம். இதனால் காங்கிரஸ் கவுன்சிலர்களால் தங்கள் வார்டுகளில் பணிகளை செய்ய முடியாமல் தவிக்கிறார்கள்.

இந்த விவகாரத்தை உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கும் எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளார்கள்.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதலால் ஒன்றிணைந்து பணியாற்றுவார்களா? என்று மாவட்ட அளவிலான நிர்வாகிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

Tags:    

Similar News