ஆறுமுகநேரி அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல்- கணவன்-மனைவி, குழந்தை படுகாயம்
- கட்டிட தொழிலாளி முத்து பிரகாஷ் மனைவி, குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் முக்காணிக்கு சென்றுள்ளனர்.
- ஆறுமுகநேரி சாலையில் எதிரே வேகமாக வந்த கார் இவர்கள் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி காணியாளன்புதுரை சேர்ந்தவர் முத்து பிரகாஷ் (வயது 26). கட்டிட தொழிலாளி. இவருக்கு அனுசியா (22) என்ற மனைவியும் வினோதினி என்கிற 8 மாத குழந்தையும் உள்ளனர்.
இவர்கள் 3 பேரும் நேற்று மோட்டார் சைக்கிளில் முக்காணிக்கு சென்றுள்ளனர்.
பின்னர் அவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஆத்தூர்- ஆறுமுகநேரி சாலையில் எதிரே வேகமாக வந்த கார் இவர்கள் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் முத்து பிரகாஷ், அவரது மனைவி ஆகிய இருவருக்கும் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன. குழந்தை வினோதினிக்கு பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக 3 பேரும் ஆத்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த மதுரையை சேர்ந்த வசந்தகுமார் என்பவர் மீது ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.