உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரம் அருகே பஸ் மோதி வியாபாரி பலி

Published On 2023-07-17 09:27 IST   |   Update On 2023-07-17 09:30:00 IST
  • சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் சரக்கு வாகனத்தின் பின்புறம் வேகமாக மோதியது.
  • படுகாயம் அடைந்த கமல்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மாமல்லபுரம்:

சென்னை அபிராமபுரம் பகுதியை சேர்ந்தவர் கமல்ராஜ் (வயது 24). கற்பூர வியாபாரி. இவருக்கு கல்பாக்கம் அருகே உள்ள விட்டிலாபுரத்தில் ஒரு வீடு உள்ளது. வார நாட்களில் நண்பர்கள், உறவினர்களுடன் சென்று அங்கு ஓய்வு எடுப்பது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று கமல்ராஜ் தனது நண்பர்கள் 6 பேருடன் விட்டிலாபுரத்தில் உள்ள வீட்டில் ஓய்வு எடுப்பதற்காக சரக்கு வாகனத்தில் சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். மாமல்லபுரம் அடுத்த மணமை என்ற இடத்தில் சரக்கு வாகனம் செல்லும்போது, சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் சரக்கு வாகனத்தின் பின்புறம் வேகமாக மோதியது.

இதில் சரக்கு வாகனம் சாலையில் தூக்கி வீசப்பட்டு கவிழ்ந்தது.

இதில் படுகாயம் அடைந்த கமல்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசார் உயிரிழந்த கமல்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

அவருடன் வந்து காயமடைந்த 6 பேரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News