உள்ளூர் செய்திகள்

விருத்தாசலம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினர்

Published On 2023-01-20 13:35 IST   |   Update On 2023-01-20 13:35:00 IST

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த தொரவளூர் கிராமத்தில் உள்ள பாசன ஏரிக்கரையில் 40 ஆண்டுகாலமாக குடியிருக்கும் வீடுகளை அகற்ற வருவாய் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பி காலக்கெடு வைத்தனர். அதன்படி இதற்கான காலக்கெடு இன்று முடிந்ததால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வரும் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் கருப்பு கொடி ஏற்றி உள்ளனர். விருத்தாசலம் அடுத்த தொரவளூர் கிராமத்தில் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையின் இருபுறங்களிலும் சுமார் 40 வீடுகள் கட்டி பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலை மற்றும் ஓடை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூறி வருவாய்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனடிப்படையில் விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர் நிலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினர் அகற்றி வருகின்றனர்

    தொரவளூர் கிராமத்தில் உள்ள பாசன ஏரி கரையில் அமைந்துள்ள 40 வீடுகளை அகற்றக்கோரி வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பினர். இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இழக்கும் நிலை இருப்பதால், தங்களுக்கு மாற்று இடம் அளிக்குமாறு பலமுறை விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் மாற்றிடம் ஏதும் அரசால் வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஆக்கிரமிப்பு களை இன்று அகற்ற வருவாய் துறை சார்பில் தொரவலூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

    Tags:    

    Similar News