போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் சான்றிதழ் வழங்கிய காட்சி.
தென்காசியில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள்- கலெக்டர் பங்கேற்பு
- போட்டியானது இலஞ்சி ராமசாமி பிள்ளை பள்ளியிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரம் வரை நடத்தப்பட்டது.
- பங்கு பெற்ற அனைவருக்கும் குடிநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரித்தல், பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து நடத்தும் மகளிர்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
போட்டியானது இலஞ்சி ராமசாமி பிள்ளை அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி யிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரம் வரை நடத்தப்பட்டது. போட்டியில் ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பாக்கியவதி முதல் இடத்தையும், மாணிக்க ஸ்ரீ 2-ம் இடத்தையும், ஆக்ஸ்போர்டு பள்ளியை சேர்ந்த பொனிஷா, இலஞ்சி ராமசுவாமி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 3-ம் இடத்தையும் தட்டிச் சென்றனர்.
பரிசு
வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1000, 2-ம் பரிசு ரூ.750,
3-ம் பரிசு ரூ.500 மற்றும் சான்றிதழ்கள் மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் வழங்கினார். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் குளிர்பானம், குடிநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது. விழாவில் தென்காசி மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு, தென்காசி மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, தென்காசி மாவட்ட சகி ஒருங்கிணை ப்பாளர் மையத்தின் மைய நிர்வாகி ஜெயராணி, சமூக விரிவாக்க அலுவலர் ஆரோக்கிய மேரி, ராமசுவாமி பிள்ளை அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி இலஞ்சி தலைமையாசிரியர் ஆறுமுகம், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.