உள்ளூர் செய்திகள்

மின்வாரியத்துறையினர் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கிய போது எடுத்தபடம்.

விவசாயிகளுக்கு வனவிலங்குகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு

Published On 2023-05-11 13:43 IST   |   Update On 2023-05-11 13:43:00 IST
  • வனவிலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க திருட்டுதனமாக வயல்வெளிகளில் மின்வேலி பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
  • வனவிலங்குகள் விவசாய பயிர்களை சேதபடுத்தினால் தமிழக அரசு மூலம் உரிய இழப்பீடு வழங்கப்படும்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி, பென்னாகரம் உள்ளிட்ட மலையை ஒட்டிய கிராமங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கரும்பு, கேழ்வரகு, வாழை, நெல் உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர்.

அவ்வப்போது வனப்பகுதிகளில் உள்ள யானைகள் மற்றும் காட்டு பன்றிகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி விவசாய நிலங்களில் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகிறது.

அதனை கட்டுப்படுத்த விவசாயிகள் தங்களது வயல் வெளிகளில் இரும்பு கம்பிகள் மூலம் தடுப்பு வேலிகள் அமைத்து இரவு நேரங்களில் நிலத்திற்கு அருகே உள்ள மின்கம்பத்தில் இருந்து திருட்டுதனமாக மின்சாரத்தை எடுத்து கம்பி வேலிகளில் இணைத்து விடுகின்றனர்.

அதனால் வனவிலங்குள் மற்றும் மனித உயிரிழப்பும் ஏற்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாரண்டஹள்ளி அருகே விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட மின்சாரத்தில் சிக்கி 3 காட்டுயானைகளும், கம்பைநல்லூர் அருகே தாழ்வாக இருந்த மின்கம்பி மீது உரசி 1 யானையும் உயிரிழந்தது.

அதனையடுத்து வனத்தை ஒட்டி உள்ள கிராம பகுதிகளில் மின்சார துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மின்சாரத்துறையினர் பொது மக்களிடம் விழிப்புணர்வு துண்டறிக்கையை வழங்கினர்.

அப்போது வனவிலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க திருட்டுதனமாக வயல்வெளிகளில் மின்வேலி பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வனவிலங்குகள் விவசாய பயிர்களை சேதபடுத்தினால் தமிழக அரசு மூலம் உரிய இழப்பீடு வழங்கப்படும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதே போல் வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின்சார கம்பிகளையும் மாற்றி உயரமாக அமைக்கபட்டு வருகின்றனர். மேலும் வனத்தை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்கு சென்று சட்டவிரோதமாக கம்பி வேலிகளில் மின்சாரம் இணைப்பு செய்துள்ளனரா? என மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags:    

Similar News