தென்னை பூச்சி நோய் தாக்குதல் குறித்த விழிப்புணர்வு
- கிருஷ்ணகிரி வட்டாரத்தில் சுமார் 2 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
- ஒரு எக்டேருக்கு 1800 வீதம் மரத்தின் ஓலையின் அடிப்பகுதியில் விடுவிக்க வேண்டும்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி வட்டாரத்தில் தென்னையில் பூச்சி நோய் தாக்குதல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கிருஷ்ணகிரி வட்டாரத்தில் சுமார் 2 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் தென்னையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் குறிப்பிடத்தக்க அளவு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. கருத்தலைப்புழு, சுருள் வெள்ளை ஈக்கள், காண்டாமிருக வண்டு போன்ற பூச்சிகளாலும், தஞ்சாவூர் வாடல் நோயாலும் அதிக சேதாரம் ஏற்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி வட்டாரத்திற்கு உட்பட்ட சோக்காடி, பச்சிகானப்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் கருத்தலைப்புழு, ரூகோஸ், சுருள் வெள்ளை ஈக்கள் தாக்கிய வயல்களை ஆய்வு மேற்கொள்ள வேளாண்மை உதவி இயக்குநர்கள் கிருஷ்ணகிரி சுரேஷ்குமார், வேப்பனஅள்ளி வானதி, பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் சசிகுமார், தோட்டக்கலைத்துறை உதவி பேராசிரியர் கீதாலட்சுமி மற்றும் கிருஷ்ணகிரி உதவி வேளாண்மை அலுவலர்கள் வயலாய்வு மற்றும் முக்கிய நோய்கிளன் சேதார அறிகுறிகள் குறித்து செயல்விளக்கம், பூச்சி நோயை கட்டுப்படுத்துவதற்கான தொழில்நுட்ப விழிப்புணர்வு முகாம் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.
மேலும், மஞ்சள் நிற பொறி, வளர்ச்சி அடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடைய தாள், மஞ்சள் நிற பாலீத்தின் தாள்களால் உருவாக்கப்பட்ட ஒட்டும் பொறிகள் (நீளம் 3 அடி, அகலம் 1 அடி) 10 என்ற எண்ணிக்கையில் 6 அடி உயரத்தில் வைத்து, பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். பிராக்கான் பிரவி கார்னிஸ் ஒட்டுண்ணிகள், ஒரு எக்டேருக்கு 1800 வீதம் மரத்தின் ஓலையின் அடிப்பகுதியில் விடுவிக்க வேண்டும் எனவும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். இதில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.