உள்ளூர் செய்திகள்

பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன்.

பள்ளி இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி -முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் பேச்சுவார்த்தை

Published On 2022-06-18 09:45 GMT   |   Update On 2022-06-18 09:45 GMT
  • ரெட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
  • சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் 2 தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

நெல்லை:

நெல்லையை அடுத்த ரெட்டியார்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் சுமார் 350-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் இருந்த பழமையான கட்டிடம் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி சமீபத்தில் கலெக்டரின் உத்தரவின் காரணமாக இடித்து அகற்றப்பட்டது.

தற்போது அந்த இடத்தை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் அமைக்க பள்ளி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அதில் பாதி இடம் அங்கு உள்ள கோவில் நிர்வாகத்தினர் கொடுத்தது. அதனை திருப்பித் தரும்படி அந்த இடத்தின் முன்னாள் உரிமையாளர்கள் கேட்டனர்.

இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் சார்பில் பெருமாள்புரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் அங்கு வந்து 2 தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். அங்கு முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் வந்து பள்ளி நிர்வாகம் மற்றும் ஊர் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

பள்ளிக்கு கொடுத்த இடத்தை மீண்டும் கேட்பது நியாயம் இல்லை. அந்த இடத்தில் காம்பவுண்டு சுவர் கட்டி மாணவ மாணவிகள் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானம் அமைக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதுதொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள பேசி முடிக்கப்பட்டது.

Tags:    

Similar News