சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து 48 நாள் விரதம் தொடங்கினர்
- கார்த்திகை முதல் நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
- கோவில்களில் சரண கோஷம் விண்ணதிர எதிரொலித்தது
கோவை,
சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை விழா இன்று தொடங்கியது. மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி அய்யப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் கார்த்திகை முதல் நாளான இன்று மாலை அணிந்தனர்.
இதனால் கோவையில் உள்ள பிரபலமான சித்தாபுதூர் அய்யப்பன் கோவிலில் அதிகாலை முதலே மாலை அணிவதற்காக ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.
அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதிகாலையிலேயே குளிர்ந்த நீரில் குளித்து வழக்கமான ஆடைகளை களைந்து கருப்பு மற்றும் நீல நிற வேட்டி அணிந்து கோவிலுக்கு வந்தனர். அங்கு பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். 50 வயதை கடந்த பெண்கள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளும் மாலை அணிந்தனர்.
மாலை அணிந்த போது கோவில்களில் "சுவாமியே சரணம் அய்யப்பா" என்ற சரண கோஷம் விண்ணதிர கேட்டது.
இன்று முதல் கடுமையான விரதத்தை கடைபிடிக்கும் அய்யப்ப பக்தர்கள் அசைவ உணவு, புகை பிடித்தல், மது குடித்தல், பொய் பேசுதல் ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்ப்பார்கள். பிரம்மச்சரியத்தை கடை பிடிப்பார்கள். காலை மற்றும் மாலையில் குளிர்ந்த நீரில் குளித்து அய்யப்பன் படத்தின் முன்பு விளக்கேற்றி 18 சரண கோஷம் போடு வார்கள்.
காலில் செருப்பு அணி வதையும் தவிர்ப்பார்கள். அதே ேபால் இரவில் தரையிேலயே படுத்து தூங்கு வார்கள். விரத காலத்தில் மற்ற அய்யப்ப பக்தர்கள் வீடுகள் மற்றும் கோவில்களில் நடை பெறும் அய்யப்பன் பூஜையில் கலந்து கொண்டு கூட்டு சரணம் போடுவார்கள்.
தினமும் மாலையில் அய்யப்ப பக்தர்கள் கூடி பஜனை பாடல்களும் பாடுவார்கள். இன்று முதல் ஜனவரி 15-ந்தேதி வரை எங்கும் மாலை அணிந்த பக்தர்களை பார்க்கலாம். சரண கோஷத்தையும் கேட்கலாம்.
கார்த்திகை முதல் நாள் என்பதால் பக்தர்கள் கூட்டமும் கோவிலில் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.
இதேபோல் சங்கனூரில் உள்ள அய்யப்பன் கோவில், மேட்டுப்பாளையத்தில் உள்ள அய்யப்பன் கோவிலிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.