உள்ளூர் செய்திகள்

சிமெண்டு லாரி மோதி தந்தை-மகன் பலி

Published On 2022-11-20 12:15 IST   |   Update On 2022-11-20 12:15:00 IST
  • சிமெண்டு லாரி மோதி தந்தை-மகன் பலியாகினர்
  • இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்தனர்

அரியலூர்

அரியலூர் தெற்கு சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் சந்திரகாசன் (வயது 52), விவசாயி. இவரது மகன் திருமாறன் (13). இவர் அரியலூரில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை சந்திரகாசன் தனது மகனை பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

கல்லங்குறிச்சி காட்டுக்கொட்டாய் அருகே சென்றபோது அந்த வழியாக சிமெண்டு மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த திருமாறன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த சந்திரகாசனை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சந்திரகாசன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிமெண்டு ஏற்றி சென்ற லாரி மோதி தந்தை-மகன் பலியான சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் மறியலில் ஈடுபட்டனர். மேலும் பலியான சந்திரகாசன் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News