ஜெயங்கொண்டம் அருகே கொள்ளை போன நகையை கண்டுபிடித்து தருவதாக நாடகமாடிய போலி சாமியார்-போலீசார் தீவிர விசாரணை
- ஜெயங்கொண்டம் அருகே கொள்ளை போன நகையை கண்டுபிடித்து தருவதாக நாடகமாடிய போலி சாமியாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
- மகா காளியம்மன் கோவில் உண்டியலை கடந்த வாரம் மர்ம நபர்கள் உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த நகைகளை திருடி சென்றனர்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மணக்கரை செல்லும் வழியில் உள்ள மகா காளியம்மன் கோவில் உண்டியலை கடந்த வாரம் மர்ம நபர்கள் உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த நகைகளை திருடி சென்றனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் போலீசார் மோப்பநாய் வரவழைத்து நகைகளை தேடி வந்த நிலையில், திடீரென ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவர், நான் பூஜை செய்து நகைகளை கண்டுபிடித்து தருவதாக அந்த பகுதி மக்களிடம் தெரிவித்து பூஜை நடத்தினார்.
அப்போது அவர் வைத்திருந்த செல்போனை எடுத்து போனில் பேசுவது போல் நாடகமாடி உங்கள் நகை ஒரு இடத்தில் உள்ளது, அதை நானே எடுத்து அம்மனின் கழுத்தில் சாற்றுகிறேன் என கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவர் பின்னால் சென்றனர். தோப்பில் ஏற்கனவே புதைக்கப்பட்டிருந்த நகையை எடுத்து அவரே அம்மன் கழுத்தில் நகையை அணிந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இவர் சென்ற பிறகு கழுத்தில் உள்ள நகையை எடுத்து பார்த்த போது நகைகள் அனைத்தும் போலி நகை என தெரியவந்துள்ளது.
இதையடுத்து வார்டு கவுன்சிலர் செல்வராஜ் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டரிடம் நடந்ததை கூறி அவர் மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. அவரை விசாரித்து நகையை மீட்டு தர வேண்டும் என கூறினர். அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் விசாரணை நடத்தி வருகின்றார்.