கோவையில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை தாக்கிய ஆட்டோ டிரைவர்
- ஆட்டோ டிரைவர் மது போதைக்கு அடிமையானதால் மாணவி பழகுவதை தவிர்த்தார்.
- ஆலாந்துறை போலீசார் ஆட்டோ டிரைவரை கைது செய்தனர்
கோவை,
கோவையை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி. இவர் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், மாணவிக்கு கோவை அறிவொளி நகரை சேர்ந்த 22 வயது ஆட்டோ டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இரண்டு பேரும் கடந்த 5 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் ஆட்டோ டிரைவர் மது போதைக்கு அடிமையானார்.
இது மாணவிக்கு அவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கடந்த 6 மாதங்களாக மாணவி ஆட்டோ டிரைவருடன் பேசுவதையும், பழகுவதையும் முற்றிலும் தவிர்த்தார்.
இது ஆட்டோ டிரைவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சம்பவத்தன்று மாணவி கல்லூரியில் உள்ள உணவகத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கே சென்ற ஆட்டோ டிரைவர் மாணவி கையை பிடித்து என்னுடன் வா என அழைத்தார்.
அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து ஆட்டோ டிரைவர் மாணவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இது குறித்து மாணவி ஆலாந்துறை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரிக்கு சென்று காதலிக்க மறுத்த மாணவியை தாக்கிய ஆட்டோ டிரைவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.