உள்ளூர் செய்திகள்

எடப்பாடி பழனிசாமி

தி.மு.க.வுக்கு வாக்களித்த மக்கள் இப்போது வேதனையுடன் உள்ளனர் - எடப்பாடி பழனிசாமி

Published On 2022-09-29 19:49 GMT   |   Update On 2022-09-30 02:26 GMT
  • தேர்தல் வாக்குறுதிகள் குறித்து தி.மு.க. மாறி மாறி பேசுவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் தெரிவித்தார்.
  • நாங்கள் பெற்ற பிள்ளைக்கு வேறுயாரோ பெயர் வைப்பது வேதனையாக உள்ளது என்றார்.

சிவகாசி:

சிவகாசியில் அருகே திருத்தங்கலில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று பேசியதாவது:

52 லட்சம் மாணவர்களுக்கு வழங்கிய லேப்டாப் திட்டத்தை திமுக அரசு நிறுத்தியது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களும் மருத்துவ படிப்புகளில் சேர வேண்டும் என்பதற்காக 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கினோம்.

ஆனால் நீட் விலக்கு உள்ளிட்ட வாக்குறுதிகள் குறித்து தி.மு.க.வினர் மாற்றி, மாற்றி பேசுகின்றனர். நாங்கள் கொண்டுவந்த திட்டங்கள், மருத்துவக் கல்லூரிகளுக்கு நீங்கள் ரிப்பன் வெட்டி துவங்கி வைக்கின்றனர்.

நாங்கள் பெற்ற பிள்ளைக்கு வேறுயாரோ பெயர் வைப்பது வேதனையாக உள்ளது. ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார், கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டுள்ளார். மக்களுக்காக நீங்கள் என்ன சாதனை செய்துள்ளீர்கள்?

திராவிட மாடலை உருவாக்கியது அ.தி.மு.க. தான். திராவிட மாடல் என சொல்வதற்கு ஸ்டாலின் என்ன செய்தார்? அம்மா கிளினிக்கை மூடினர். தற்போது அம்மா உணகத்தையும் மூட இந்த அரசு முயற்சித்து வருகிறது. பொங்கல் பண்டிகை வந்தாலே தி.மு.க. அரசு கொடுத்த பரிசு பொருட்கள் தான் ஞாபகம் வருகிறது. ஏழை மக்களுக்கு கொடுக்கக்கூடிய பொருட்களில் கூட ஊழல் செய்துள்ளனர். அனைத்திலும் கமிஷன், கலெக்ஷன், கரெப்சன்.

உயர்கல்வித்துறை அமைச்சர் பெண்கள் பஸ்சில் ஓசியில் செல்வதாகக் கூறுகிறார். அது மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான் கொடுக்கின்றனர். அதனை அவர் கொச்சைப்படுத்துகிறார்.

இதற்கெல்லாம் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தி.மு.க.விற்கு பாடம் கொடுப்பார்கள். மக்கள்தான் எஜமானர்கள், நீதிபதிகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என தெரிவித்தார்.

Tags:    

Similar News