உள்ளூர் செய்திகள்

நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உருவ பொம்மைகள் தீ வைத்து எரிப்பு- 30 பேர் கைது

Published On 2024-02-22 09:41 GMT   |   Update On 2024-02-22 09:41 GMT
  • அமரன் திரைப்படத்தை வெளியிடக் கூடாது என வலியுறுத்தினர்.
  • போராட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

தஞ்சாவூா்:

அமரன் திரைப்படத்தின் டீசர் எனப்படும் முன்னோட்டக் காட்சிகள் வெளியானது. அதில் காஷ்மீா் இளைஞா்களையும், போராட்டத்தில் ஈடுபடுபவா்களை பயங்கரவாதிகளாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதை கண்டித்து அப்படத்தை தயாரித்த நடிகர் கமல்ஹாசன், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோரை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.

அந்த வகையில் கும்பகோணம் காந்தி பூங்கா நுழைவாயில் முன்பு விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். இதில் மாநில இளந்தமிழ்ப்புலிகள் பாசறை துணை அமைப்பாளர் விஜய ஆனந்த், மகளிர் அணி மாநில செயலாளர் வெண்ணிலா சேகர், மாவட்ட துணைச் செயலாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்தப் போராட்டத்தில் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் ஆகியோரை கண்டித்து அவர்களது உருவ பொம்மைகளை தீயிட்டு எரித்து கோஷங்கள் எழுப்பினர். அமரன் திரைப்படத்தை வெளியிடக் கூடாது என வலியுறுத்தினர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று எரிந்து கொண்டிருந்த உருவ பொம்மைகள் மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவம் கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News