உள்ளூர் செய்திகள்

சினிமாவில் நடிப்பது மட்டும் அரசியலுக்கு போதாது- விஜய்க்கு, மதுரை ஆதீனம் எதிர்ப்பு

Published On 2025-04-02 10:22 IST   |   Update On 2025-04-02 10:22:00 IST
  • மக்களின் பிரச்சனைகளை உணர்ந்து வர வேண்டும்.
  • மக்களுக்காக தொண்டு செய்வது தான் அரசியல்.

திருவிடைமருதூர்:

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே கஞ்சனூர் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலுக்கு மதுரை ஆதீனம் 293-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் தரிசனம் செய்ய வருகை தந்தார்.

அவருக்கு விழா கமிட்டியினரும், கிராம மக்களும் பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கிராம தெய்வ வழிபாடு முக்கியமானது. மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கஞ்சனூரில் உள்ள அக்னீஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம், சுற்றுச்சுவர் உள்ளிட்ட திருப்பணிகள் முடிந்துள்ளது. பிரகாரங்கள் மற்றும் விமானங்களின் திருப்பணிகள் நடந்து வருகிறது.

2028-ம் ஆண்டு வரும் கும்பகோணம் மகாமக பெருவிழா மிகப்பெரிய விழாவாக நிச்சயமாக கொண்டாட அரசு முயற்சிக்கும் என்பது எங்கள் நம்பிக்கை.

அரசியல் என்பது யார் வேண்டுமானாலும் வருவது என்பது கூடாது. கடுமையாக உழைத்து அனுபவரீதியாக மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து அரசியலுக்கு வர வேண்டும். சினிமா அரசியல் தேவையில்லை. சினிமா சினிமாவாகவே இருக்க வேண்டும்.

சினிமாவில் நடிப்பது மட்டும் அரசியலுக்கு போதும் என்று நினைப்பது தவறு. மக்களுக்காக தொண்டு செய்வது தான் அரசியல். மக்களுக்காக பல்வேறு துறைகளில் தொண்டு செய்யக் கூடியவர்கள் போற்றப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News