கலெக்டரிடம் மனு அளித்த தொழிலாளி கலியபெருமாள்.
தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் மனு அளிக்க வந்த தொழிலாளி
- என்னுடைய இடத்தை மீட்டு அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பெட்ரோல் கேனை போலீசார் கண்டுபிடித்து அதனை பறித்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார்.
இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
அப்போது அம்மாபேட்டை அருகே உக்கடை ஊராட்சி வேளாளர் தெரு சேர்மன்நல்லூர் பகுதியை சேர்ந்த கலியபெருமாள் (வயது 52) என்பவர் பெட்ரோல் கேனை மறைத்து வைத்துக் கொண்டு தனது மனைவி செல்வியுடன் கலெக்டர் அலுவலகத்தில் நுழைந்தார்.
பின்னர் அவர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்களுக்கு தங்கராசு, சரவணகுமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
மகன்கள் இருவரும் மாற்றுத்திறனாளி ஆவர்.
எனக்கு சொந்தமான இடத்தை ஒருவர் ஆக்கிரமித்துள்ளார்.
மேலும் அந்த நபர் வேலியை புல்டோசர் வைத்து இடித்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே என்னுடைய இடத்தை மீட்டு அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து மனு அளித்து வெளியே வரும்போது கலியபெருமாள் வைத்திருந்த பெட்ரோல் கேனை போலீசார் கண்டுபிடித்து அதனை பறித்தனர்.
பின்னர் அவரிடம் எதற்காக பெட்ரோல் கேன் கொண்டு வந்தார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.