உள்ளூர் செய்திகள்

கோவையில் ரவுடியை சுட்டுக்கொல்ல சீன நாட்டு துப்பாக்கியை பயன்படுத்திய கும்பல்

Published On 2023-03-04 09:56 GMT   |   Update On 2023-03-04 09:56 GMT
  • ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஊழியராக சத்தியபாண்டி வேலை செய்து வந்தார்.
  • போலீசார் 10 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டனர்.

கோவை

மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியபாண்டி (31). இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர்.

கோவை விளாங்கு–றிச்சியில் தங்கியிருந்து, அங்குள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஊழியராக சத்தியபாண்டி வேலை செய்து வந்தார்.

கடந்த மாதம் 12-ம் தேதி இரவு பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள கருப்பக்கால் தோட்டம் என்ற பகுதியில் சத்திய–பாண்டியை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொன்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில் திரையரங்கு விவகாரம் தொடர்பாக இருந்த முன்விரோதம் காரணமாக சத்தியபாண்டி கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக தீத்தி–பாளையத்தை சேர்ந்த காஜா உசேன்(24), செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த சஞ்சய்குமார்(23), அல்ஜபீர்கான், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த ஆல்வின்(37), ஆயுதங்களை மறைத்து வைக்க உதவிய தீத்திப்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன்(25) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

இதற்கிடையே இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராஜா என்பவர் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் சஞ்சய் ராஜா கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்த போலீசார், ஜே.எம்.3 நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்ப்படுத்தினர். போலீசார் 10 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டனர். நீதிமன்றம் 5 நாட்கள் விசாரிக்க அனுமதித்தது. இதையடுத்து அவரை தனியிடத்தில் வைத்து வழக்கு தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக மாநகர போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, சத்தியபாண்டி கொல்லப்பட்ட போது ஒரு துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது. இக்கும்பலிடம் மேலும் ஒரு துப்பாக்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, 2 துப்பா க்கிகளையும் கண்டறிந்து பறிமுதல் செய்வத ற்கான நடவடிக்கை தீவிரப்படு்த்த–ப்பட்டுள்ளது.

2 துப்பாக்கிகளும் சீனா நாட்டில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும். சில லட்சங்கள் அளித்து இடைத்தரகர்கள் மூலம் இவற்றை வாங்கியிருக்கலாம் எனத் தெரிகிறது.

துப்பாக்கி எப்படி வாங்கப்பட்டது, அதற்கு பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், சத்தியபாண்டி கொலை வழக்கில் கூடுதல் தகவல்களை பெற காவலில் எடுக்கப்பட்ட சஞ்சய் ராஜாவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News