திண்டிவனம் அருகே மின்சாதன கடையில் தீப்பிடித்து ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
- ராஜாராம் அதே பகுதியில் எலக்ட்ரிக்கல் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார்.
- எலக்ட்ரிக்கல் பொருட்கள் தீப்பிடித்து எரிந்து வெடித்து சிதறியது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜாராம். இவர் அதே பகுதியில் எலக்ட்ரிக்கல் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். நேற்று மாலை கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். இரவு 8.30 மணி அளவில் வீட்டிற்குள் இருந்து திடீரென கரும்புகை வந்தது. உள்ளே சென்று பார்த்தபோது எலக்ட்ரிக்கல் பொருட்கள் தீப்பிடித்து எரிந்து வெடித்து சிதறியது.
இதனையடுத்து திண்டிவனம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் ராஜாராம் வீட்டில் இருந்த டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஹோம் தியேட்டர் போன்ற எலக்ட்ரிகல் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதுகுறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.