உள்ளூர் செய்திகள்

வால்பாறை அருகே கோவிலில் உண்டியல் பணம் திருடிய சிறுவன் கைது

Published On 2023-10-20 14:16 IST   |   Update On 2023-10-20 14:32:00 IST
  • கடந்த 17-ந் தேதி கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு போய் இருந்தது.
  • பூசாரி வால்பாறை போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார்.

வால்பாறை,

கோவை மாவட்டம் வால்பாறை அருகே நடுமலை எஸ்டேட் பகுதியில் பிரசித்தி பெற்ற துண்டு கருப்பராயர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 17-ந் தேதி காலை துண்டு கருப்பராயர் கோவில் பூசாரி கருப்பசாமி சென்ற போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு போய் இருந்தது. இதுபற்றி கோவில் பூசாரி வால்பாறை போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

கோவில் வளாகத்தில் மாசிலாமணி என்பவர் ஆட்டோவை நிறுத்தி சென்று உள்ளார். அவரது ஆட்டோவில் இருந்த ஸ்பீக்கர் பாக்ஸையும் காணவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில் நடுமலை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவன் கட்டப்பையில் ஏதோ பொருட்களை எடுத்துச் சென்றதை அந்த பகுதியினர் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் அந்த சிறுவனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் கோவிலில் உண்டியலை உடைத்து திருடியதையும், ஸ்பீக்கர் பாக்சை திருடியதையும் ஒப்புக் கொண்டார். இதையடுத்து சிறுவனை போலீசார் கைது செய்தனர்.   

Tags:    

Similar News