உள்ளூர் செய்திகள்

7 நாட்களும், 7 விதமாக டெங்கு, நிபா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு- சுகாதாரத்துறை அதிகாரி தகவல்

Published On 2023-09-21 14:44 IST   |   Update On 2023-09-21 14:44:00 IST
  • மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.
  • கோவை மாநகர் பகுதிகளில் உயர்மட்ட தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணி நடந்தது.

கோவை,

கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருகிறது. இதனால் அந்த மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கேரளாவில் நிபா வைரஸ் பரவியதை தொடர்ந்து அண்டை மாநிலமான தமிழகத்திலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

குறிப்பாக கேரளாவையொட்டி இருக்க கூடிய கோவை, நீலகிரி, கன்னியா குமரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

கோவை மாவட்டத்தில் உள்ள வாளையார் சோதனை சாவடி, பொள்ளாச்சி மீனாட்சிபுரம் உள்ளிட்ட அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு பலப்ப டுத்தப்பட்டுள்ளது. கேரளா வில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது. மேலும் மாவட்டத்திலும் மக்களிடம் நிபா வைரஸ் மற்றும் டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் சுகாதாரத்துறை, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து டெங்கு, நிபா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

தற்போது மழைக்காலம் துவங்கி உள்ளதால் கோவை மாவட்டத்தில் எவ்விதமான தொற்றும் பரவாமல் தடுப்பதற்கான மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு-கேரள எல்லை பகுதிகளில் இருக்கும் கிராமங்களில் மருத்துவ பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி கோவை மாவட்டத்தில் கேரளாவையொட்டி இருக்கும் கிராமப்புற பகுதிகளில் உள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது.

மேலும் எல்லையோர கிராம பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரியில் போதுமான அளவிற்கு மருந்துகள் தடுப்பூசிகள் ஸ்டாக் வைத்து கொள்வது, மக்களுக்கு நிபா வைரஸ், டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

அதன்படி வாரத்தில் 7 நாட்களும் ஒவ்வொரு விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. திங்கட்கிழமை பொது மக்களிடையே விழிப்புணர்வு ஊர்வலமும், செவ்வாய்கிழமை ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாக சென்று டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்த உள் ளோம்.

புதன்கிழமை மாநகராட்சி பகுதிகளில் உள்ள உயர்மட்ட தண்ணீர் தொட்டிகளை சுத்தப்படுத்துவது, வியாழக்கிழமை ரோடு, வீடு பகுதிகளில் உள்ள டயர்களை அப்புறப்படுத்துதல், வெள்ளிக்கிழமை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, சனிக்கிழமை வீடு வீடாக சென்று பாத்திரங்களில் தண்ணீர் இருந்தால் சுத்தமாக வைத்துக் கொள்ளும் படி அறிவுறுத்துவது என ஆலோசிக்கப்பட்டுள்ளது.

நேற்று கோவை மாநகர் பகுதிகளில் உயர்மட்ட தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணி நடந்தது. இதில் 100 தொட்டிகளை சுத்தம் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருகின்றனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News