கோவையில் வங்கி அதிகாரியிடம் ரூ.54 லட்சம் மோசடி
- பர்னீச்சர் கடையை விரிவுபடுத்துவதற்காக பணம் வாங்கி ஏமாற்றிய வியாபாரி
- கேரளாவில் பதுங்கியவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை
கோவை,
கோவை பாப்பநாயக்கன்பாளையம், கார்டன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தராஜன் (வயது 59). தனியார் வங்கியில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
இந்த நிலையில் விவேகானந்தராஜன் பீளமேடு போலீசில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
எனக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சசிகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் கேரளாவில் பர்னீச்சர் கடை நடத்தி வருவதாகவும், தொழிலை விரிவுபடுத்துவதற்காக பணம் தேவைப்படுகிறது. நீங்கள் தரும்பட்சத்தில் வட்டியுடன் அசலை குறித்த காலத்துக்குள் திருப்பி செலுத்தி விடுவதாக வாக்குறுதி அளித்தார். இதனை நம்பிய நான் அவருக்கு ரூ.54.07 லட்சம் கொடுத்தேன்.
என்னிடம் பணத்தை பெற்றுக் கொண்ட சசிகுமார், குறித்த காலத்துக்குள் பணத்தை திருப்பி செலுத்தவில்லை. எனவே நான் அவரிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன். இதற்கு அவர் மறுத்து வருகிறார். எனவே போலீசார் இதுதொ டர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
புகாரின்பேரில் பீளமேடு போலீசார் வழக்குபதிவு செய்து கேரளாவில் பதுங்கியிருந்த சசிக்குமாரை பிடித்து வந்து போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினர். இதில் அவர் விவேகானந்தராஜனிடம் ரூ.54 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி மோசடி செய்தது தெரிய வந்தது.
பின்னர் சசிக்குமாரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.