தென்னையில் 50 வகை சத்தான உணவுப் பொருட்கள் -உலக தென்னை தின விழாவில் தகவல்
- தேங்காய் எண்ணை, நீரா, தென்னை சர்க்கரையை பொதுமக்கள் அதிகம் உபயோகிக்க வேண்டுகோள்
- இந்தோனேசியா, பிலிப்பைன்சில் இருந்து தேங்காய் எண்ணை, கொப்பரை இறக்குமதியை நிறுத்தவும் கோரிக்கை
பொள்ளாச்சி,
மத்திய தென்னை வளர்ச்சி வாரியம், தென்னை மகத்துவ மையம், செயல்விளக்க மற்றும் விதை உற்பத்தி பண்ணையில் உலக தென்னை தினம் கொண்டாடப்பட்டது.
நடப்பாண்டு கருப்பொருளான தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறைக்கான தென்னைத்துறையை நிலைநிறுத்துதல் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் மாரியப்பன் உள்பட பலர் பங்கேற்று பேசினர்.
பொள்ளாச்சி எம்.பி.யும், மத்திய தென்னை வளர்ச்சி வாரிய உறுப்பினருமான சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில் தென்னை சார் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆரோக்கியத்தை பராமரிக்க தேங்காய் எண்ணை, நீரா மற்றும் தென்னை சர்க்கரை உள்ளிட்ட தென்னை சார் பொருட்களை மக்கள் அதிகம் உபயோகிக்க வேண்டும்.
இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தேங்காய் எண்ணை மற்றும் கொப்பரை இறக்குமதி செய்வதை நிறுத்த மத்திய அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் மற்றும் கேரள எல்லைப் பகுதியில் இருந்து பூச்சி மற்றும் நோய் பரவுவதை தடுக்க அதிகாரிகளும், விவசாயிகளும் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.
தென்னை வளர்ச்சி வாரிய மேலாளர் ரகோத்து மன், மத்திய தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் தென்னை வளர்ச்சி மற்றும் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினார். மேலும் இளநீர், தேங்காய் மற்றும் தென்னை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை அன்றாடம் வாழ்வில் நாம் பயன்படுத்துவோம் என கேட்டுக் கொண்டார்.
வேளாண்மை பல்க லைக்கழக பேராசிரியர் ராஜமாணிக்கம் பேசுகையில் தென்னையில் இருந்து 50 வகையான மதிப்பு கூட்டப்பட்ட சத்தான உணவு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றில் வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள், புரதம், ஆக்சிஜனேற்றிகள் என ஏராளமான நன்மைகள் உள்ளன.
தென்னை சாகுபடியின் உலகளாவிய சூழல், தேங்காய் உற்பத்தி, ஊட்டச்சத்து அம்சங்கள் மற்றும் தொழில்துறை முக்கியத்துவம், தேங்காய் சார் பொருட்கள் குறித்து அனைவரும் அறிய வேண்டும் என்றார்.