உள்ளூர் செய்திகள்

2-வது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

Published On 2023-02-02 06:52 GMT   |   Update On 2023-02-02 06:52 GMT
  • 7 ஆண்டுகள் கடந்தும் இதுவரை கூலி உயர்வு வழங்கப்படவில்லை. இதனை கண்டித்தும் கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தியும் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நேற்று விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
  • இதனால் ஆயிரக்கணக்கான தொழிலா ளர்கள் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 30,000-க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு

வருகின்றன. தொழிலாளர்க ளுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு கூலி ஒப்பந்தம் போடப்பட்டது. மேலும் மாவட்ட கலெக்டர் முன்னி லையில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி ஒப்பந்தம் போடப்படும் என அப்போது முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் 7 ஆண்டுகள் கடந்தும் இதுவரை கூலி உயர்வு வழங்கப்படவில்லை. இதனை கண்டித்தும் கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தியும் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நேற்று விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் ஆயிரக்கணக்கான தொழிலா ளர்கள் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர்.

இது குறித்து விசைத்தறி தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சுப்பிரமணி கூறுகையில், தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு அடிப்படையில் 75% கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் முடங்கியுள்ளன. தொழிலா ளர்கள் பாதிக்கப்படும் முன்னர், வட்டாட்சியர் தலைமையில் முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு தீர்வு காண வேண்டும். அதுவரை குழு கடன் வசூலிக்க கால அவகாசம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றார்.

இதற்கிடையே விசைத்தறி கூட்டு தொழில் சங்கத்தின் சார்பில் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஊர்வலமாக சென்ற தொழிற்சங்கத்தினர், வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அப்போது அவர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News