உள்ளூர் செய்திகள்
சீமான்

உத்தரப்பிரதேச மாடலையும் மிஞ்சும் ஆன்மீக திராவிட மாடல் ஆட்சி- சீமான் காட்டம்

Published On 2022-06-02 16:07 IST   |   Update On 2022-06-02 16:07:00 IST
காடுகளிலுள்ள யானைகளின் இருப்புக்கோ, அவை செல்வதற்கான வழித்தடத்துக்கோ வழிவகை செய்யாத தி.மு.க. அரசு, கோவில் யானைகளுக்கு நினைவு மண்டபம் கட்டத்துடிப்பது வெட்கக்கேடானது என சீமான் கூறியுள்ளார்.
சென்னை:

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னையின் பூர்வீக குடிகளின் வாழ்விடங்களை இடித்துத் தகர்த்து மண்ணின் மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு, ரூ.20 கோடி மதிப்பீட்டில் ஆவடியில் பசு மடம் கட்டுகிறது திராவிட மாடல் அரசு. இல்லை! இல்லை! ஆன்மீக திராவிட மாடல் அரசு.

சிதம்பரம் நடராசர் கோவிலில் தமிழர் மூதாதை நந்தன் உள்நுழைந்த தெற்கு நுழைவாயில் அடைக்கப்பட்டு, இன்றும் தீண்டாமைச்சுவர் இருக்கிறதெனக் கூறி, அதனைத் தகர்த்துவிட்டு, நந்தன் பெயரில் மணிமண்டபம் கட்டக்கோருகிறோம். இறந்துபோன கோவில் யானைகளுக்குக் கோவில்களில் நினைவு மண்டபங்கள் கட்டுகிறது சமூக நீதி அரசு! இல்லை! இல்லை! மனுநீதி அரசு.

கோவையில் கடந்த 5 ஆண்டு காலத்தில் மட்டும் 79 யானைகள் இறந்துள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன. காடுகளிலுள்ள யானைகளின் இருப்புக்கோ, அவை செல்வதற்கான வழித்தடத்துக்கோ வழிவகை செய்யாத தி.மு.க. அரசு, கோவில் யானைகளுக்கு நினைவு மண்டபம் கட்டத்துடிப்பது வெட்கக்கேடானது.

அரசின் பெயரில் கடன் வாங்கும் ரூ.90 ஆயிரம் கோடியில்தானே, பசுக்களுக்கு மடமும், யானைகளுக்கு நினைவு மண்டபமும் கட்டுகிறீர்கள்? சிறப்பு! சிறப்போ சிறப்பு! உத்தரப்பிரதேச மாடலையும் மிஞ்சிவிடும் உங்களது ஆன்மீக திராவிட மாடல் ஆட்சி.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News