உள்ளூர் செய்திகள்
மணக்குள விநாயகர் கோவில் பக்தர்களுக்கு துணிப்பை- எதிர்கட்சித்தலைவர் சிவா வழங்கினார்
புதுவையில் தி.மு.க. சார்பில் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் என்று துணி பைகள் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
புதுச்சேரி:
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மாரிசாமி பத்திரிசியா அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தி.மு.க. மாநில அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ. பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, துணிப்பைகளை கோவிலுக்கு வந்திருந்த சுமார் 200க்கும் பக்தர்களுக்கு வழங்கினார். மேலும் பாரம்பரிய உணவு வகைகளை பயன்படுத்துவோம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடலை உருண்டை, ஆரஞ்சு மிட்டாய், கமர்கட், எள் உருண்டை ஆகியவைகளையும் சிவா எம்.எல்.ஏ. வழங்கினார்.
இதுகுறித்து சிவா எம்.எல்.ஏ. கூறும்போது, தமிழகத்தில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம் என்ற வகையில் மஞ்சப்பை அறிமுகப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அதன் படி புதுவையிலும் தி.மு.க. சார்பில் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் என்று துணி பைகள் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்த முன்வர வேண்டும் என தெரிவித்தார்.