பொன்னேரி பகுதியில் ரேசன் கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை
பொன்னேரி:
பொன்னேரி வட்டத்தில் 249 ரேசன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள சில கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சரிவர பொருட்கள் வழங்கப்படுவதில்லை எனவும், எடை குறைவாக வழங்கப்படுவதாகவும், விலையில்லா அரிசி தரப்படுவதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
மேலும் பல இடங்களில் கைரேகைப் பதிவு கருவிகள் செயல்படவில்லை என கூறி பொருட்கள் வாங்க வரும் குடும்ப அட்டை தாரர்களின் கைரேகைகளை பதிவு செய்யாமல் முறைகேடு நடப்பதாகவும் புகார் எழுந்துள்ளன.
இந்த நிலையில் கலால் பிரிவு உதவி ஆணையரும், பொன்னேரி பொறுப்பு வருவாய் கோட்டாட்சியருமான பரமேஸ்வரி தலைமையில் வட்ட வழங்கல் அதிகாரி சண்முகசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் பொன்னேரி பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
போலீஸ் டி.எஸ்.பி. அலுவலகம் அருகே உள்ள ரேசன் கடை, கவுரி தியேட்டர் அருகே உள்ள ரேசன் கடைகளில் ஆய்வு செய்த அதிகாரிகள் பதிவேட்டில் உள்ளபடி உணவு பொருட்கள் கையிருப்பில் உள்ளனவா? எடைஎந்திரம், கைரேகை பதிவு கருவி ஆகியவை சரியாக செயல்படுகிறதா ? என்பது குறித்தும் சோதனை செய்தனர். மேலும் பொருட்கள் வாங்க வந்த குடும்ப அட்டைதாரர்களிடம் கடைகளில் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்றும் கேட்டறிந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, இணையதள சேவையில் ஏற்படும் குளறுபடி காரணமாக சில நேரங்களில் ரேசன் கடைகளில் கைரேகை பதிவு கருவியில் சிக்கல்கள் ஏற்படுகிறது. முறைகேட்டில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.