உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

பராமரிப்பின்றி வீணாகும் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு அரங்கம்

Published On 2022-05-13 10:18 IST   |   Update On 2022-05-13 10:18:00 IST
இந்திராகாந்தி விளையாட்டு அரங்கம் பராமரிப்பின்றி வீணாகிறது. இதனால் வீரர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
புதுச்சேரி:

புதுவை உப்பளத்தில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டு அரங்கத்தில் நாள்தோறும் பல்வேறு விளையாட்டு பயிற்சிகளில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பொதுமக்கள் ஏராளமானோர் நடை பயிற்சிக்கு வருகின்றனர். 

ஆனால், தற்போது அரங்கம்  பராமரிப்பில்லாததால் செயற்கை புல்வெளி ஹாக்கி திடல் மோசமாகி  வீணாகி விட்டது.  அதோடு, கழிவறை, குடிநீர் வசதிகளும் சரியாக இல்லை. கடந்த ஆண்டு பிப்ரவரியில் புதுவைக்கு வந்த பிரதமர் மோடி விளையாட்டு அரங்கத்தில் 400 மீட்டர் சிந்தடிக் தடகள ஓடுகளம் அமைக்க அடிக்கல் நாட்டினார். அவர் அடிக்கல் நாட்டி 14 மாதங்களாகியும் பணி முடிவடையவில்லை. ஆமை வேகத்திலேயே பணிகள் நடக்கிறது.

சிந்தடிக் தடகள ஓடுகளம் ரூ.7 கோடியும், நீச்சல் குளம் அமைக்க ரூ. 5 கோடியும் மத்திய அரசு நிதி தர முடிவு எடுத்தது. ஆனால், பணிகள் செய்வதில் ஏற்பட்ட குளறுபடியாலும், முதல்கட்ட பணிகளை முடிக்காததாலும் அடுத்தக்கட்ட நிதியை மத்திய அரசிடம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சிந்தடிக் தடகள ஓடுகளம் பணியை ஒப்படைப்பதிலும் குளறுபடி ஏற்பட்டு, தற்போது வட இந்திய நிறுவனத்திடம் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. கால்பந்து, ஹாக்கி, தடகளம்  உள்ளிட்ட விளையாட்டுக்கு சிந்தடிக் திடல்கள் இல்லாததால் வீரர்கள் மண்ணில் விளையாடுவதால்  ஆட்டத்திறன் பாதிக்கப்படுகிறது. பராமரிப்பு இல்லாததால் தேசிய அளவிலான போட்டிகள்  நடத்த முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.விளையாட்டுத்துறை கல்வித்துறையின் கீழ் உள்ளது. 

இதனால் விளையாட்டுத்துறைக்கு நிதி ஒதுக்குவதில் சிக்கலும் பற்றாக்குறையும் உள்ளது. விளையாட்டுக்கு தனித்துறை அமைக்கப்படும் என ஆட்சியாளர்கள் பல முறை அறிவித்தும் நடைமுறைக்கு வரவில்லை. விளையாட்டுக்கு தனித்துறை அமைத்தால்தான் பிரச்சினைகள் தீரும் என விளையாட்டு வீரர்கள் கூறுகின்றனர்.

Similar News