உள்ளூர் செய்திகள்
ஜிப்மர் இயக்குனர் உருவபடம் எரிப்பு
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஜிப்மர் இயக்குனர் உருவபடம் எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் கடந்த 29-ந் தேதி பிறப்பித்த உத்தரவில், எதிர்காலத்தில் ஜிப்மரில் பயன்படுத்தப்படும் பதிவுகள், சேவை புத்தகங்கள், பணிக்கால கணக்குகள் என அனைத்திலும் இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இதற்கு தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள், பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் ஆர்ப்பாட்டம் உள்ளி ட்டவற்றில் ஈடுபட்டன.
இந்த நிலையில், புதுவை ஜிப்மரில் மருத்துவமனையில் இந்தி மொழி கட்டாயப்படுத்தி திணிக்கப்படுவதையும், அதற்காக சுற்றறிக்கை அனுப்பிய அந்த நிர்வாக இயக்குனரைக் கண்டித்தும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று ஜிப்மர் மருத்துவமனை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இதற்காக கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமையில். மாநில நிர்வாகிகள் தலையாரி, அரிமா தமிழன், செல்வந்தன், எழில்மாறன், தமிழ்வளவன் ஆகியோர் முன்னிலையில் 100- க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் சுப்பையா திருமண மண்டபம் அருகே ஒன்று கூடினர்.
அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக ஜிப்மர் மருத்துவமனை நோக்கி வந்தனர். அவர்கள் ஜிப்மரில் இந்தி திணிப்பு நடவடிக்கையைக் கண்டித்தும், அது தொடர்பாக நிர்வாகத்தின் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், இந்தி திணிப்புக்கு காரணமான மத்திய பா.ஜனதா அரசைக் கண்டித்தும் கோஷமிட்டனர்.
ஜிப்மர் மருத்துவமனை முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா, போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். அப்போது போலீசாருக்கும், விடுதலை சிறுத்தையினருக்கும் இடையில் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து ஜிப்மர் மருத்துவமனை நுழைவு வாயில் முன்பு விடுதலை சிறுத்தையினர் கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் திடிரென தாங்கள் மறைத்து வைத்திருந்த ஜிப்மர் இயக்குனரின் உருவ படத்தை தீயிட்டு கொளுத்தி, காலால் மிதித்தனர். இதனை போலீசார் தடுக்க முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அவர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அவர்களது போராட்டம் நீடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 75 பேரை போலீசார் கைது செய்தனர்.