உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாடத்தில் பா.ம.க. அமைப்பாளர் கணபதி பேசிய காட்சி.

பா.ம.க. ஆர்ப்பாட்டம்

Published On 2022-05-11 14:20 IST   |   Update On 2022-05-11 14:20:00 IST
ஜிப்மரில் இந்தி திணிப்பை கண்டித்து பா.ம.க. ஊர்வலம் - ஆர்ப்பாட்டம் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
புதுச்சேரி:

ஜிப்மர் மருத்துவமனையில் அலுவல் மொழியாக இந்தி மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது‌. 

இதனை கண்டித்து அரசியல் கட்சிகள் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 

அதுபோல் பா.ம.க. சார்பில் ஜிப்மர் மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து புதுவை ராஜீவ்காந்தி சதுக்கத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக ஜிப்மர் மருத்துவமனை நோக்கி கண்டன கோஷங்களை எழுப்பியபடி வந்தனர். ஊர்வலத்திற்கு பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதி தலைமை தாங்கினார்.

ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.தொடர்ந்து முன்னேறிய  பா.ம.க.வினர்  ஜிப்மர் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, ஜிப்மரில் இந்தியை திணிக்காதே,  இயக்குநரின் உத்தரவை திரும்ப பெறு என்று கோஷங்களை எழுப்பினர்.

பின்னர், பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதி  கூறியதாவது:-

ஜிப்மரில் கவர்னர் வந்து ஆய்வு செய்துவிட்டு எல்லாம் பழைய நடைமுறையில்தான் உள்ளது என்றார். ஆனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் பதிவேடுகளிலும் இந்திதான் உள்ளது. இதை ஜிப்மர் நிர்வாகம் நிறுத்த வேண்டும்.

ஜிப்மர் பணியாளர் தேர்வுக்கு வடமாநிலத்தில் தேர்வு மையத்தை இயக்குனர் அமைக்கிறார். இது புதுவை மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்க செய்கிறது. இந்தி தெரிந்த 80 சதவீதம் பேரை இங்கு பணியமர்த்த முயற்சிப்பது  நிரூபணமாகிறது. 

ஜிப்மரின் இந்தி திணிப்பை கண்டித்து போராடுவோர் நோயாளிக்கு எதிராக போடுபவர்கள் என்று கவர்னர் குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை இயக்குநர் விரட்டுகிறார். அவருக்கு எதிராகத்தான் போராட்டம் நடத்துகிறோம். தமிழ் மண்ணில் இந்தியை திணிக்க முடியாது. இவ்வாறு கணபதி கூறினார்.

Similar News