கோத்தகிரியில் 2 நாட்கள் நடந்த காய்கறி கண்காட்சியை 15 ஆயிரம் பேர் ரசித்தனர்
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி 2 நாட்கள் நடைபெற்றது.
இந்த காய்கறி கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 600 கிலோ முள்ளங்கி மற்றும் கேரட் கொண்டு உருவாக்கப்பட்ட குட்டியுடன் கூடிய ஒட்டக சிவிங்கி சுற்றுலாபயணிகளை வெகுவாக கவர்ந்தது. மலை காய்கறிகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட மீன், வீணை, கடிகாரம், ஊட்டி உருவாகி 200 ஆண்டுகளை நினைவு படுத்தும் வகையில் ஊட்டி 200 என்ற வடிவங்களும், செல்பி ஸ்டாண்ட், காய்கறி சிற்பம் உள்ளிட்டவைகளும் தோட்டக்கலைத் துறையால் அமைக்கப்பட்டிருந்தன.
பிற மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் அரங்குகளில் மயில், முதலை, பஞ்சவர்ணக்கிளி, பாண்டா கரடி, கப்பல், மீன், டோரா உள்ளிட்ட காய்கறி சிற்பங்களை அமைத்து காட்சிப்படுத்தி இருந்தனர்.
இந்த கண்காட்சியை சுமார் 15 ஆயிரம் பேர் வரை ரசித்துள்ளனர். குடும்பத்தினருடன் திரண்ட சுற்றுலாபயணிகள் காய்கறி சிற்பங்கள் முன்பு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
கண்காட்சியின் நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. கலெக்டர் அம்ரித் பங்கேற்று கண்காட்சியில் சிறப்பாக செயல்பட்ட 84 நபர்களுக்கு பரிசுகளும், சுழற்கோப்பைகளும் வழங்கினார். கோத்தகிரி பேரூராட்சி சார்பில் பயன்படுத்தப்பட்ட டயர்களில் மான், முயல், காட்டுமாடு உள்ளிட்டவை அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனை பாராட்டி கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டனுக்கு கலெக்டர் அம்ரித் பரிசுகளை வழங்கினார்.