உள்ளூர் செய்திகள்
மார்க்சிஸ்டு கம்யூ. கட்சியினர்-பொதுமக்கள் முற்றுகை

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மார்க்சிஸ்டு கம்யூ. கட்சியினர்-பொதுமக்கள் முற்றுகை

Published On 2022-05-06 16:55 IST   |   Update On 2022-05-06 16:55:00 IST
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல ஆண்டு காலமாக தண்ணீர் தேங்காத கரம்பாக உள்ள நீர்நிலை புறம்போக்கில் வசிக்கின்ற மக்களுக்கு வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில் அப்புறப்படுத்தப்படும் நடவடிக்கையை மாற்று இடம் கொடுக்கும் வரை செய்ய கூடாது.

வாழ்வாதாரத்திற்கு ஏற்ப நகர்புறத்திலேயே மாற்று இடம் வழங்க வேண்டும். கோவில் , சர்ச் , மசூதி நிலங்களில் குடியிருக்கும் இடத்திற்கான வாடகை உயர்வை திரும்பப் பெற வேண்டும். வாடகை பாக்கி என்ற பெயரில் , இடத்தை விட்டு வெளியேற்ற கூடாது.

அனைத்து சமய இடங்களில் வசிக்கும் மக்களுக்கு , இடத்திற்கான தொகையை நிர்ணயித்து ( தவணை முறையில் பெற்று ) கிரயம் செய்து , பட்டா வழங்கிட வேண்டும். புறம்போக்கில் வசிக்கும் மக்களுக்கு காலதாமதமின்றி பட்டா வழங்கிட வேண்டும். ஏழை , எளிய மக்களுக்கு வழங்கும் வீடு கட்டும் திட்டத் தொகையினை ரூ .5 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று காலை மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் மாநகர செயலாளர் அமர்நாத், மாவட்டச் செயலாளர் சிவானந்தன் ஆகியோர் முன்னிலையில் மத்தியகுழு உறுப்பினர் வாசுகி, மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு மற்றும் பொது மக்கள் 300-க்கும் நிர்வாகிகள் திரண்டனர். பின்னர் பேரணியாக கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் தங்கள் மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் வழங்குவதற்கு அனைவரும் திரண்டு உள்ளே சென்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 10 பேருக்கு மட்டுமே அனுமதி என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அங்கு திரண்டு இருந்த நபர்கள் கலெக்டர் நிலையத்தை முற்றுகையிட்டு அனைவரும் உள்ளே சென்று தங்கள் மனுக்களை வழங்க வேண்டும் என கூறினர்.

அப்போது கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் 10 நபர்களுக்கு மட்டுமே போலீசார் அனுமதி அளித்ததை தொடர்ந்து மனு அளித்து வந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

Similar News