உள்ளூர் செய்திகள்
பாா்வையாளா்களை கவா்ந்த தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட வாலிபரின் ஓவியங்கள்
மாற்றுத்திறனாளிகள் ஓவியக் கண்காட்சியில் இடம்பெற்றன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள பிராவிடன்ஸ் பெண்கள் கல்லூரி அரங்கில் ஆா்ட் பவுண்டேஷன் அமைப்பின் சாா்பில் மாற்றுத்திறனாளி மாணவா்கள் வரைந்த ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் 10-ம் வகுப்பு படித்த காா்த்திகேயன் (வயது 23) என்பவர் கலந்து கொண்டார்.
இவர் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறாா். 10-ம் வகுப்பு வரை படித்த அவருக்கு நோய் தாக்கம் அதிகரித்ததால் தனது பள்ளிப்படிப்பை அவரால் தொடர முடியவில்லை.அப்போது பா்வத் நீலகிரிஸ் என்ற தனியாா் தொண்டு நிறுவனத்தின் சாா்பில் அதன் நிறுவனா் ஷோபா என்பவரால் அந்த மாணவனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.
அந்த மாணவன் ஓவியம் வரைவதில் அதிக ஆா்வம் கொண்டிருந்ததால் அவரை ஓவியம் வரைவதற்கு அதிக ஊக்கமும் அளித்துள்ளார். அந்த ஊக்கத்தின் காரணமாக தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட காா்த்திகேயன் கடந்த 3½ ஆண்டுகளில் 30 படங்களை தத்ரூபமாக வரைந்துள்ளாா்.
குறிப்பாக அவருக்கு சிறு வயது முதல் காா் மீது அதிகம் விருப்பம் இருந்தால் 20-க்கும் மேற்பட்ட காா் படங்களையும், கிரிக்கெட் வீரா் தோனி, நடிகா்கள் விஜய், சூா்யா, மிஸ்டா் பீன் உள்ளிட்டோரின் படங்களையும் ஓவியமாக வரைந்துள்ளார். தனக்கு ஊக்கமளித்த தனியாா் தொண்டு நிறுவனா் ஷோபாவின் படத்வதையும் வரைந்து அவருக்கு பரிசாக வழங்கியுள்ளாா்.
திறமையை வெளிப்படுத்த ஊனம் ஒரு குறையில்லை என்பதை காா்த்திகேயன் 30 படங்களை வரைந்து சாதனை படைத்துள்ளாா். இதைத்தொடா்ந்து ஊட்டி மலா் கண்காட்சியை திறந்து வைக்க ஊட்டிக்கு வர உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பரிசாக வழங்கிட ஸ்டாலின் படத்தையும் காா்த்திகேயன் வரையத் தொடங்கி உள்ளாா்.
இதுகுறித்து நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளா் நித்தின் கூறும்போது, ஆா்ட் மாரத்தான் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த கண்காட்சி பள்ளி மாணவா்களுக்கென நடத்தப்பட்டது. அதில் மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்கும் வகையில் உரிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்காதோம். காா்த்திகேயனின் கனவை விரைவில் நிறைவேற்ற இருக்கிறோம் என்றார்.