உள்ளூர் செய்திகள்
அருப்புக்கோட்டை அருகே பெண்ணிடம் நகை பறித்த கும்பலை கைது செய்யக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடியைச் சேர்ந்தவர் ருக்குமணி (வயது 72). இவர் சம்பவத்தன்று அதேபகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் திடீரென ருக்மணியை மறித்து அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புகோட்டை சொக்கலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (48). இவர் சம்பவத்தன்று ஜவுளி கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென மகாலட்சுமி கழுத்தில் கிடந்த தாலி செயினை பறித்தனர்.
அப்போது மகாலட்சுமி தாலிசெயினை இறுக பிடித்துக் கொண்டார். இதனால் கொள்ளையர்களால் செயினை பறிக்க முடியவில்லை. ஏமாற்றம் அடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரி ன்பேரில் அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கண்ட 2 நகை பறிப்பு சம்பவங்களில் ஒரேகும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, பந்தல்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து நகை பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது இதனால் பெண்கள் வெளியில் நடமாடவே அச்சமடைந்துள்ளனர்.
எனவே போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி நகைபறிப்பு கும்பலை கைதுசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.