உள்ளூர் செய்திகள்
பொது தகவல் அலுவலர்கள் தகவல் உரிமை சட்டம் 2005 விதிகளை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்
பொது தகவல் அலுவலர்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் நீங்கள் அதனை கேட்டு தெரிந்து கொண்டு, 2005 விதிகள் தெரிவித்துள்ளபடி மனுதாரர்கள் அளித்த மனுக்கள் மீது பதில்கள் வழங்க வேண்டும்
ஊட்டி:
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 தொடர்பான பொது தகவல் அலுவலர்களுக்கு பயிற்சி மற்றும் அறிவுரைகள் வழங்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார் தலைமை தாங்கினார். கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தமிழ்நாடு தகவல் அறியும் உரிமை சட்ட ஆணையர் பிரதாப் குமார் பேசியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் கீழ் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து பொது தகவல் அலுவலர்களுக்கு தகவல் உரிமை சட்டம் தொடர்பாக பயிற்சி, அறிவுரைகள் வழங்கப்பட்டது.
2005-ல் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பல்வேறு மனுதாரர்களின் மனுக்கள் மீது பதில் கிடைக்க பெற்றுள்ளது. இது நமது நாட்டிற்கு கிடைத்த 2-வது சுதந்திரமாக நான் பார்க்கிறேன்.
இந்த சட்டத்தில் 30 பிரிவுகள் உள்ளது. இதில் நாம் 28 பிரிவுகளை பயன்படுத்தி வருகிறோம். பொது தகவல் அலுவலர்கள் 5 முதல் 10 பிரிவுகளை நன்றாக தெரிந்திருந்தால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களுக்கு எளிதாகவும், தெளிவாகவும் பதில்கள் அளிக்க முடியும்.
தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 விதிகளை பொது தகவல் அலுவலர்கள் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனுதாரர் தங்களிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அளிப்பதற்கு முன்னதாக தங்களது அலுவலகத்தை நாடி ஏதேனும் தகவல் கோரும் பட்சத்தில் அவர்களை நல்ல முறையில் அணுகி தேவையான பதில்களை வழங்கினால் இதுபோன்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுதாரர்களின் மனுக்களை குறைக்க முடியும்.
மேலும் பொது தகவல் அலுவலர்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் நீங்கள் அதனை கேட்டு தெரிந்து கொண்டு, 2005 விதிகள் தெரிவித்துள்ளபடி மனுதாரர்கள் அளித்த மனுக்கள் மீது பதில்கள் வழங்க வேண்டும். மேலும் வாரந்தோறும் திங்கட்கிழமை நடக்கும் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பாக நிலுவையில் உள்ள மனுதாரர்களின் மனுக்களை ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) தனப்பிரியா மற்றும் பொது தகவல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.