உள்ளூர் செய்திகள்
கட்டுமான பணிகள் நடந்த காட்சி.

நடுவட்டம் பஸ் நிலையம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்

Published On 2022-04-29 14:55 IST   |   Update On 2022-04-29 14:55:00 IST
புதிய பஸ் நிலையம் அத்துடன் சேர்ந்து வணிக வளாகமும் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஊட்டி:
 
ஊட்டி அருகே நடுவட்டம் பேரூராட்சிக்குட்பட்ட நடுவட்டம் கிராமம் உள்ளது. இப்பகுதியில் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் முக்கிய வழித்தடத்தில் அமைந்துள்ளது. 

மேலும், ஊட்டியில் இருந்து கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாகவும் உள்ளது. இவ்வழித்தடத்தில் செல்லும் அனைத்து அரசு பஸ்களும் இங்கு நிறுத்துவது வழக்கம். 

அதேபோல், சுற்றுலா பயணிகள் வாகனங்களும் அங்கு நிறுத்தி தேநீர் மற்றும் உணவு உட்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த பல ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பஸ் நிலையம் மிகவும் பழுதடைந்ததால், அந்த பஸ் நிலையம் இடிக்கப்பட்டது. 

புதிதாக பஸ் நிலையம் மற்றும் வணிக வளாகம் ஆகியவை மூலதன நிதியின் கீழ் ரூ.3 கோடியில் கடந்த ஓராண்டிற்கு முன் தொடங்கப்பட்டு தற்போது கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

 பணிகளை பேருராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராஹிம்ஷா, செயல் அலுவலர் பிரதீப்குமார், பேரூராட்சித் தலைவா் கலியமூா்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். இது குறித்து நடுவட்டம் பேரூராட்சி தலைவர் கலியமூா்த்தி கூறுகையில், புதிய பஸ் நிலையம் அத்துடன் சேர்ந்து வணிக வளாகமும் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணிகள் ஒரு மாதத்திற்குள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.

Similar News