உள்ளூர் செய்திகள்
கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் சுற்றி திரியும் காட்டு யானைகள்
வனப்பகுதிக்குள் விரட்ட வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரவேணு:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வனப் பகுதியில் யானை, மான் உள்பட ஏராளமான காட்டு விலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது.
இதனால் தண்ணீா் மற்றும் பசுந்தீவனங்களைத் தேடி காட்டு யானைகள், காட்டெருமைகள் அதிக அளவில் வெளியே வரத் தொடங்கி உள்ளன.
இந்நிலையில், கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. ஏற்கனவே இந்த சாலையில் குட்டியுடன் வந்த ஒற்றை யானை பஸ் மற்றும் வாகனங்களை சேதப்படுத்தியது.
இதன் காரணமாக வனத் துறையினா் தற்போது தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
நீலகிரியில் தற்போது சீசன் தொடங்கியுள்ளதால், அதிக அளவிலான வாகனங்கள் இப்பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வந்து செல்கின்றன.
அசம்பாவிதங்கள் நடக்கும் முன் யானைகளை அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.