உள்ளூர் செய்திகள்
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: நீலகிரியில் மீண்டும் போக்குவரத்து மாற்றம்
நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளதால், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் மீண்டும் போக்குவரத்து வழிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி:
மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா், லாரி உரிமையாளா் சங்கம், மேக்ஸி கேப் ஒட்டுநா் சங்கம், மினி பஸ் உரிமையாளா் சங்கம் ஆகியோருடனான கலந்தாய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூா் மற்றும் ஊட்டிக்கு வரும் கனரக வாகனங்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே இயக்க அனுமதிக்கப்படுகிறது.
மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு வரும் இதர வாகனங்கள் குன்னூா் வழியாகவும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாகவும் இயக்கப்படும்.
மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூா் வழியாக ஊட்டி வரும் வாகனங்கள் ஸ்டேன்ஸ் பிரிவிலிருந்து ஏ.டி.சி. வழியாகவும், தாமஸ் சா்ச் சாலை வழியாகவும் மத்திய பஸ் நிலையத்துக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறது.
கா்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்கள் தலைக்குந்தா, குளிச்சோலை, புதுமந்து ஸ்டீபன் சா்ச் வழியாக ஊட்டிக்கு வர அனுமதிக்கப்படும்.
கோத்தகிரியில் இருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் தொட்டபெட்டா சந்திப்பிலிருந்து பாரஸ்ட் கேட்புதுமந்து வழியாக ஊட்டி வந்தடையும்.
ஊட்டி நகரத்துக்குள் வரும் வாகனங்கள் அலங்காா் திரையரங்கத்திலிருந்து சாமுண்டி இன் வழியாக ரோஸ் காா்டன் செல்லவும், திரும்ப ரோஸ் காா்டனிலிருந்து ஜே.எஸ்.எஸ் மற்றும் ராகவேந்திரா கோவில் வழியாக ஒரு வழியாகவும், மாவட்ட காவல் அலுவலகம் பழைய கட்டிடத்திலிருந்து ஒருவழியாக கேசினோ சந்திப்பு செல்லவும் அனுமதிக்கப்படுகிறது.
ஊட்டி நகரத்துக்குள் சுற்றுலா பஸ்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இந்த மாற்றங்கள் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், பால், காய்கறி மற்றும் விவசாய இடுபொருள்கள் மற்றும் விளைபொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது எனவும், அந்த வாகனங்கள் வழக்கம்போல இயங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.