கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் குட்டியுடன் சுற்றி திரியும் காட்டு யானைகள் கூட்டம்
அரவேணு:
நீலகிரி மாவட்ட வனப்பகுதிகள் காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன.
இந்த வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுவதை வழக்கமாக வைத்துள்ளது.
அப்படி வரும் விலங்குகள் குடியிருப்பு பகுதியில் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தி வருகிறது. யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினரும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் யானைகள் ஊருக்குள் நுழைந்து கொண்டு தான் இருக்கிறது.
கோத்தகிரி குஞ்சப்பனை அருகே உள்ளது கோழிக்கரை கிராமம். இந்த கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக இந்த கிராமத்தையொட்டி 3 யானைகள் 2 குட்டிகளுடன் சுற்றி திரிந்து வருகின்றன.
இந்த யானைகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிக்கு செல்லக் கூடிய சாலைகள் மற்றும் விளை நிலங்கள் அருகே நிற்கிறது.
இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்வோர் எப்போது யானை வருமோ என்ற அச்சத்திலேயே பயணித்து வருகின்றனர்.
எனவே இந்த யானைகள் ஊருக்குள் நுழையாத வண்ணம், வனப்பகுதியில் அகழிகள் வெட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.