உள்ளூர் செய்திகள்
நடவடிக்கை

திரவ மிட்டாய்கள் விற்றால் நடவடிக்கை

Published On 2022-04-25 15:19 IST   |   Update On 2022-04-25 15:19:00 IST
விருதுநகர் மாவட்டத்தில் திரவ மிட்டாய்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

விருதுநகர் மாவட்டத்தில் பாதுகாப்பான உணவுபொருட்கள் நுகர்வோரை சென்றடைய பல்வேறு  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் ஊசிபோடும் சிரிஞ்சில் திரவ சாக்லேட் மிட்டாயை நிரப்பி விற்பதாக  பத்திரிக்கைகள்  மூலம்  அறியப்பட்டது. இதையடுத்து மாவட்டம் முழுவதும்  உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் உள்ள  சந்தேகத்திற்கிடமான  கடைகளில் ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது சிவகாசி பகுதியில் ஊசிபோடும் சிரிஞ்சில் நிரப்பப்பட்ட சாக்லேட் கண்டறியப்பட்டு உணவு மாதிரி எடுத்து உணவு பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. 

அதேபோன்று சிறுவயதிலேயே புகை பிடித்தலை மனதில் விதைக்கும் வகையில் சிறுவர்களை கவருவதற்கு சிகரெட் வடிவில் மிட்டாய்கள் விற்கப்படுவது பறிமுதல் செய்யப்பட்டு, உணவு பாகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் கடைகளின்மீது வழக்கு தொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும்.

விருதுநகர் மாவட்டத்தில் எந்தவொரு வணிகராவது ஊசிபோடும் சிரிஞ்சில் சாக்லேட் நிரப்பி விற்றாலோ அல்லது சிகரெட் வடிவ மிட்டாய் விற்றாலோ அவர்கள்மீது துறை ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

பொதுமக்கள்  இந்தமாதிரியான  வித்தியாசமான வகையில் சாக்லேட் அல்லது மிட்டாய் வகைகள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப் பட்டால் 94440-42322 என்ற மாநில உணவு பாதுகாப்பு துறையின்  வாட்ஸ்அப்  எண்ணிற்கோ அல்லது 04562 -225255 என்ற மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் அலுவலக தொலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தகவல்  தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News