உள்ளூர் செய்திகள்
புகார்

விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்-மனைவி மீது ரூ.40 லட்சம் மோசடி புகார்

Update: 2022-04-23 05:17 GMT
விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ரவிச்சந்திரன், அவரது மனைவி வள்ளி ஆகியோர் வேலை வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் மோசடி செய்து விட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி நல்லதம்பி. இவர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர் ஆகியோர் மீது ரூ.3 கோடி மோசடி புகார் கொடுத்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நல்லதம்பி விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மேலும் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எனது சகோதரருமான ரவிச்சந்திரன், அவரது மனைவி வள்ளி ஆகியோர் வேலை வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் மோசடி செய்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தராக கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை வள்ளி செயல்பட்டு வந்தார். அப்போது கொடைக்கானலில் கடை நடத்தி வந்த ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த விஜய், அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், எழுத்தர் வேலை வாங்கி தருவதாக அவர் உறுதி அளித்தார்.

இதனை நம்பி ரவிச்சந்திரன், அவரது மனைவி வள்ளியிடம், கார் டிரைவர் கணேசன் மற்றும் எனது (நல்லதம்பி) முன்னிலையில் மதுரை, ராமுதேவன்பட்டி வீடுகளில் வைத்து ரூ.40 லட்சத்தை விஜய் கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.

தற்போது விஜய் என்னிடம் பணத்தை கேட்டு வருகிறார். எனவே பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்த ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி வள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து விசாரணைக்கு ஆஜராகும்படி நல்லதம்பியை போலீசார் அழைத்தனர். அதன்படி அவர் போலீஸ் நிலையம் வந்தார். அவரிடம் துணை சூப்பிரண்டு நாகராஜன் முன்னிலையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ரவிச்சந்திரனிடம் கேட்ட போது, எங்களுக்கு சம்மன் எதுவும் வரவில்லை என்றார்.
Tags:    

Similar News