உள்ளூர் செய்திகள்
கங்கவடநல்லூர் ஏரியில் கட்டியிருந்த வீடுகளை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றிய போது எடுத்தபடம்.

ஏரி ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகள் இடித்து அகற்றம்

Published On 2022-04-22 15:14 IST   |   Update On 2022-04-22 15:14:00 IST
அரியலூர் அருகே ஏரியை ஆக்கிரமித்து கட்டியிருந்த 50-க்கும் மேற்பட்ட வீடுகளை அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கவடங்கநல்லூர் கிராமத்தில் பாண்டியன் எனும் ஏரி உள்ளது. இதன் மொத்த பரப்பளவு 202 ஏக்கர் 83 சென்ட் நிலப்பரப்பு கொண்டது. இதனை சுற்றி பலரும் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இதில் தலித் இன மக்கள் சுமார் 50 குடும்பத்தினர் கடந்த 100 ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் சுமார் 22 வீடுகள் தற்பொழுது நீர்நிலையை ஆக்கிரமித்து இருப்பதாக கூறி அதனை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பின்படி பொதுப் பணித்துறை, மற்றும் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகளை நேற்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் கங்கவடங்கநல்லூர் கிராமத்தில் அகற்றப்பட்டது.

அப்போது தங்களுக்கு இடம் கொடுக்காமலேயே எங்கள் வீட்டை இடிக்க வருகிறீர்களே? என அப்பகுதி மக்கள் அழுது புலம்பி அதிகாரிகள் மீது மண்ணை வாரி இறைத்தனர். பெற்றோர்கள் அழுது புலம்புவதை கண்டு வேதனை அடைந்த அவர்களது படிக்கும் குழந்தைகளும் தங்கள் வீடு போகிறதே என்று கண்ணீர் மல்க அழுது அதிகாரிகளிடம் கெஞ்சியும் பயனில்லை.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது ஏரி புறம்போக்கு என்று தெரிந்தும் எங்களுக்கு தொகுப்பு வீடு கொடுத்து யார்? வீடு கட்ட அனுமதி கொடுத்தது யார்? வீட்டு வரி ரசீது கொடுத்தது யார்? குடிநீர் குழாய் இணைப்பு, மின்னிணைப்பு கொடுத்தது யார்? இவை எல்லாவற்றையும் அரசே கொடுத்துவிட்டு தற்போது மாற்று இடம் கொடுக்காமல் இடிப்பது முறையற்ற செயலாகும் என்றனர்.

மேலும் பொதுமக்கள் தங்களுடைய ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை ரோட்டில் வீசி தீயிட்டுக் கொளுத்த முயற்சித்தனர். அப்போது அருகில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தடுத்து நிறுத்தினர். பின்னர் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாரிகள் மாற்று இடம் வழங்குவதாக தெரிவித்தனர். இதையடுத்து வீடு இழந்தவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் முயற்சியால் மாற்று இடம் வழங்கப்பட்டதாக கூறி அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

Similar News