காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் புதுக்கோட்டை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
- கடலோர மாவட்டங்களில் மீனவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
- 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள், 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் கடலுக்கு சென்று வருகின்றன.
அறந்தாங்கி:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மறியுள்ளது. பின்னர் அதுவே தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அடுத்த 72 முதல் 90 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு நகரும்போது, இலங்கை மற்றும் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்றும், அந்த இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை டெல்டா மற்றும் உள்மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதன் எதிரொலியாக கடலோர மாவட்டங்களில் மீனவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுமாவடி முதல் முத்துக்குடா வரை 32 மீனவ கிராமங்கள் மற்றும் 2 மீன்பிடித்துறை முகங்கள் உள்ளன. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள், 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் கடலுக்கு சென்று வருகின்றன.
இதனை நம்பி சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நோடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள். இந்நிலையில் கடலில் காற்றின் வேகம் அதிகமாக காணப்படுவதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன் வளத்துறை சார்பில் அறிவிப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
மீன்வளத்துறையின் அறிவிப்பை தொடர்ந்து மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாமல், விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளை கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். ஏற்கனவே கடந்த மாதம் அடுத்தடுத்து உருவான புயல் சின்னங்களால் மீன்பிடி தொழில் முழுவதுமாக முடங்கியது. இந்த நிலையில் தற்போது காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்ற அறிவிப்பால் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தி உள்ளனர்.