திருப்பூர் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கோவில் இடித்து அகற்றம்: பொதுமக்கள் எதிர்ப்பு-போலீஸ் குவிப்பு
- ஆக்கிரமிப்பு குறித்து அப்பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
- வழக்கில் சம்பந்தப்பட்ட இடம் வருவாய் துறைக்கு சொந்தமானது என கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ராக்கியாப்பட்டி பகுதியில் 2.8 ஏக்கர் பரப்பளவில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதனை ஆக்கிரமித்து குமரன் குன்று என்ற பெயரில் முருகர், விநாயகர், சிவலிங்கம், நந்தி உள்ளிட்ட சன்னதிகள் கொண்ட செல்வமுத்து குமாரசாமி கோவில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள இந்த கோவிலை அவிநாசி தாசில்தார் சந்திரசேகர் , டி.எஸ்.பி., சிவகுமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் இன்று காலை இடித்து அகற்றும் பணி நடைபெற்றது.
இதையறிந்த இந்து முன்னணியினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் பலர் இடிக்க வேண்டாமென கண்ணீர் வடித்தனர். இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாதவாறு இருக்க அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
பின்னர் போலீசார், பொதுமக்களை வளாகத்தை விட்டு அப்புறப்படுத்தினர். அப்போது போலீசார் -பொதுமக்களிடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த ஆக்கிரமிப்பு குறித்து அப்பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இடம் வருவாய் துறைக்கு சொந்தமானது என கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவிலை அகற்ற வருவாய் துறையினர் நடவடிக்கை மேற்கொண்ட போது, இரு தரப்பினர் இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கோவிலை வருவாய்த்துறையினர்- போலீசார் பாதுகாப்புடன் அகற்றி உள்ளனர்.