50 அடிக்கு கீழ் சரிந்த வைகை அணை நீர்மட்டம்
- இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 49.54 அடியாக உள்ளது.
- முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.55 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு குடிநீர், பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. பருவமழை கைகொடுத்ததால் வைகை அணையின் நீர்மட்டம் கடந்த அக்டோபர் மாதம் 70 அடியை தாண்டி முழு கொள்ளளவை எட்டியது.
இதனால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்ட பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கூடுதல் தண்ணீர் திறப்பாலும், அதன்பின் மழை குறைந்ததாலும் அணையின் நீர்மட்டம் வேகமாக சரியத் தொடங்கியது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 49.54 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 680 கனஅடியாக உள்ள நிலையில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டு மதுரை, திருமங்கலம், சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்காக மட்டும் 69 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1933 மி.கனஅடியாக உள்ளது.
இதேபோல் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.55 அடியாக உள்ளது. வரத்து 341 கனஅடி, திறப்பு 1000 கனஅடி, இருப்பு 5060 மி.கனஅடி.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் மீண்டும் முழு கொள்ளளவை எட்டி 126.28 அடியில் உள்ளது. அணைக்கு வரும் 3 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கனஅடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.90 அடியாகவும், சண்முகாநதி அணை நீர்மட்டம் 34 அடியாகவும் உள்ளது.
மாவட்டத்தில் மழை குறைந்துள்ள நிலையில் கடும் பனிப்பொழிவே நிலவி வருகிறது.