தமிழ்நாடு செய்திகள்

குன்னூரில் உறைபனி தீவிரம்: அதிகாலையில் கடுங்குளிரால் பொதுமக்கள் தவிப்பு

Published On 2026-01-07 10:24 IST   |   Update On 2026-01-07 10:24:00 IST
  • இரவு நேர வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைந்து காணப்பட்டது.
  • அதிகாலை நேரங்களில் கடுங்குளிர் நிலவி வருகிறது.

குன்னூர்:

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பர்-ஜனவரி மாதங்கள் உறை பனிப்பொழிவு காலம் என்பதால் அங்கு நேற்று முதல் கடும் உறைபனி கொட்டி தீர்த்து வருகிறது.

அதிலும் குறிப்பாக குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உறைபனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

இதன்காரணமாக அங்குள்ள புல்வெளிகள் மற்றும் நீர்நிலை பகுதிகளில் பச்சைக் கம்பளத்தில் முத்துக்கள் கொட்டியது போல உறைபனி படர்ந்து இருந்தது. சாலையோரம் நின்றிருந்த வாகனங்கள் மீதும் உறை பனி படலத்தை பார்க்க முடிந்தது.

மேலும் குன்னூரில் பயிரிடப்பட்டுள்ள கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் மீது வெள்ளைக்கம்பளம் போத்தியது போல் உறைப்பனி படர்ந்து காணப்படுகிறது. பனியின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் அங்குள்ள தேயிலை செடிகள் மற்றும் மேராக்காய் பந்தல்கள் கருகும் அபாயம் ஏற்பட்டு உள்ளதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

இதற்கிடையே குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கொலக்கம்பை, சேலாஸ், கரும்பாலம், சின்ன கரும்பாலம், ஜிம்கானா, குன்னகம்பை உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேர வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைந்து காணப்பட்டது.

இதனால் அங்குள்ள பகுதிகளில் அதிகாலை நேரங்களில் கடுங்குளிர் நிலவி வருகிறது. எனவே அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் போர்வை, சால்வை உள்ளிட்டவற்றை போர்த்திக் கொண்டு நடமாடி வருகின்றனர்.

மேலும் அதிகாலை நேரங்களில் வேலைக்கு செல்லும் தோட்டத்தொழிலாளர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் ஆகியோர் கடுங்குளிரால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

Tags:    

Similar News