உள்ளூர் செய்திகள்
அரியலூரில் நடைபெற்ற கல்வி கண்காட்சியில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் திருவள்ளுவன் பேசிய போது எடுத்த பட

ஒழுக்கம் கற்க மாணவர்களுக்கு துணைவேந்தர் அறிவுரை

Published On 2022-04-22 15:07 IST   |   Update On 2022-04-22 15:07:00 IST
உயர்கல்வி படிக்க செல்லும் மாணவர்கள் ஒழுக்கத்துடன் சுய சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் கூறினார்.
அரியலூர்:

அரியலூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் கல்வி கண்காட்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் மான்போர்ட் மெட்ரிக் மேல் நிலைபள்ளி முதல்வர் அந்தோணிசாமி செழியன் வரவேற்று பேசினார்.

விழாவில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் கலந்துகொண்டு பேசியதாவது:

மாணவர்கள் புதிய படிப்புகளையும், புதிய கல்வி நிலையங்களையும் தேடி பயணம் மேற்கொள்ளும் காலம் இது. இத்தகைய சூழ்நிலையில், முதலில் மாணவர்கள் உயர் கல்வியின் தன்மையை புரிந்துகொள்ள வேண்டும். இதுவரை நீங்கள் பெற்ற கல்விக்கும் இனிமேல் நீங்கள் பெறப்போகும் கல்விக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. நீங்கள் தான் உயர் கல்வியை நாடி, தேடி செல்ல வேண்டும். இதில் மூன்று வகை மாணவர்கள் உள்ளனர்.

அதில், விரும்பிய படிப்பை விரும்பிய கல்வி நிறுவனத்தில் படிக்க வாய்ப்பு பெற்றவர், விரும்பாத படிப்பை விரும்பிய கல்வி நிறுவனத்தில் படிக்க வாய்ப்பு பெற்றவர், விரும்பாத படிப்பை விரும்பாத கல்வி நிறுவனத்தில் கட்டாய சூழ்நிலையில் படிக்கும் வாய்ப்பு பெற்றவர்.

யாராக இருந்தாலும் ஒரு புதிய பயணத்தையும், ஒரு புதிய அணுகுமுறையையும் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை இங்கு உள்ளது. இங்கு புரிதல் மிக முக்கியம். எனவே படிக்கின்ற கல்வி வேலைவாய்ப்பு தரக்கூடியதாக இருக்க வேண்டும்.

உயர்கல்வி என்பது உங்கள் வாழ்வில் ஏற்படும் பரிணாம வளர்ச்சி என்பதை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் புரிந்துகொண்டு அதற்கான முழு கவனத்தையும் செலுத்தினால் வெற்றி நிச்சயம் என பேசினார்.

Similar News