உள்ளூர் செய்திகள்
முதல்வர் ஸ்டாலின்

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளி பலி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Published On 2022-04-20 13:05 GMT   |   Update On 2022-04-20 13:05 GMT
வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சிவகாசி:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரி பர்மா காலனியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், ஒரு அறை முழுவதும் தரைமட்டமானது. அந்த அறையில் வேலை செய்துகொண்டிருந்த அரவிந்த் என்ற தொழிலாளி இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். பின்னர் கட்டிட இடிபாடிற்குள் சிக்கி கருகிய நிலையில் கிடந்த வாலிபர் அரவிந்தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இந்த துயரமான செய்தி கேட்டு வேதனை அடைந்ததாக கூறிய முதலமைச்சர், வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News