உள்ளூர் செய்திகள்
ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மேற்கு மாவட்ட மருத்துவ முகாம் நடந்தது.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மேற்கு மாவட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமை மாணிக்கம்தாகூர் எம்.பி. தொடங்கி வைத்து சுகாதார அரங்குகளை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:&
மேற்கு வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கி ரஸ் வெற்றி பெற்றுள்ளது. இது இந்தியாவின் திடமான நிலையை உறுதி செய்கிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற விலைவாசி உயர்வால் மக்கள் எண்ணத்தை இந்த இடைத்தேர்தல்கள் பிரதிபலிக்கிறது. இது வரும் காலங்களிலும் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
தமிழக அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் பாலமாக இருக்கவேண்டிய ஆளுநர் ரவி தற்போது தடைக்கல்லாக இருப்பது வருந்தத்தக்கதாகும். தமிழக முதல்வர் சட்டமன்ற கூட்டத்தில் பேசும்போது ஆளுநருக்கும், எங்களுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சினையும் இல்லை என விளக்கமாக பேசியுள்ளார். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளை ஆளுநர் ரவி மறுஆய்வு செய்து குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
யு.பி.எஸ்.சி. தலைவராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவரை நியமிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இது இந்தியாவின் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் முடிவாகதான் அமையும். இளையராஜா நல்ல ஒரு இசையமைப்பாளர். அரசியல் சார்பிலான கருத்துக்களை கூறியுள்ளார். இசைஞானியின் இசையை மட்டுமே ரசிப்போம்.
- இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மருத்துவ முகாமை தொழிலதிபர் பழனி குரு ஆறுமுகம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். சிவகாசி சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சிவலிங்கம் முகாம் குறித்து விளக்க உரையாற்றினார். வட்டார மருத்துவ அதிகாரி கருணாகர பிரபு வரவேற்றுப் பேசினார். சத்திரப்பட்டி தொழிலதிபர் ஆறுமுகம், பெற்றோர் ஆசிரியர் சங்க சார்பில் ஞானகுரு, பள்ளி யின் தலைமையாசிரியர் முத்துக்குமார் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.