உள்ளூர் செய்திகள்
ஆம்னி பஸ்சின் பின்புறம் கார் மோதி கிடக்கிறது

அருப்புக்கோட்டை நான்கு வழிச்சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது ஆம்னி பஸ்-கார் மோதி 2 பேர் பலி

Published On 2022-04-19 10:46 IST   |   Update On 2022-04-19 10:46:00 IST
அருப்புக்கோட்டை அருகே விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலையம்பட்டி:

தூத்துக்குடியில் இருந்து உப்பு லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை சேலம் ஓமலூரை சேர்ந்த சித்தையன் (வயது 64) ஓட்டி வந்தார்.

அந்த லாரி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலையம் பட்டியில் உள்ள மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் நள்ளிரவில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரியின் டயர் பஞ்சர் ஆனது. இதையடுத்து லாரியை ரோட்டின் ஓரமாக டிரைவர் நிறுத்தி பஞ்சரான டயரை மாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது அதே சாலையில் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து 36 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி ஒரு ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்து. அந்த பஸ் எதிர்பாராதவிதமாக பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது. அப்போது ஆம்னி பஸ்சுக்கு பின்னால் வந்துகொண்டிருந்த கார், ஆம்னி பஸ்சின் பின்னால் மோதியது.

இதில் பஞ்சரான பயரை கழற்றி வேறு டயரை மாட்டிக்கொண்டிருந்த லாரியின் டிரைவர் சித்தையன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தில் ஆம்னி பஸ் மற்றும் காரின் முன்பகுதி நொறுங்கியது. ஆம்னி பஸ் மற்றும் காரில் பயணம் செய்துவந்த பெண்கள் உட்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சகாயஜோஸ், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார், தீயணைப்பு துறையினர் சம்பவஇடத்திற்கு வரைந்துவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆம்னி பஸ்சில் பயணம் செய்த தூத்துக்குடியை சேர்ந்த ரவிதாகூர் 40) என்பவர் இறந்தார். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஆம்னி பஸ் டிரைவரான தூத்துக்குடியை சேர்ந்த உதயகனி, பஸ் பயணி தங்கமாரியப்பன் ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துவரப்பட்டனர்.

ஆம்னி பஸ் மற்றும் காரில் வந்த முத்துக்குமார், பத்மாவதி, ராஜா, சுயம்பு லிங்கம் உள்ளிட்ட 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தால் மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News